2025-ஆம் ஆண்டு டித்வா புயலின்போது, கலா ஓயா பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றில் சிக்கியிருந்த 69 பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை கடற்படையைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு பொதுநலவாய உயிர்காப்புச் சேவைப் பதக்கம் மற்றும் இலங்கை உயிர்காப்பு வீரர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான சீரற்ற காலநிலையால் குறித்த பேருந்து பயணிக்க முடியாமல் சிக்கியிருந்ததுடன், அதில் இருந்த பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து கடற்படையினர் முன்னெடுத்த மீட்பு நடவடிக்கையின் மூலம் 69 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
இவ்வாறு விருது வழங்கப்பட்ட மூவரும் கடற்படையின் விரைவான நடவடிக்கைப் படகுப் பிரிவில் (Rapid Action Boat Squadron – RABS) பணியாற்றுபவர்கள் ஆவர்.
அவர்களில் கடற்படை பிரதம அதிகாரி எஸ்.ஏ.இ.எல். சேனவிரத்ன, முன்னணி மாலுமி பி.கே.ஏ. பிரசாத் மற்றும் மாலுமி எஸ்.டி.டி. அபேரத்ன ஆகியோர் அடங்குகின்றனர்.
இவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டன.
ரோயல் லைஃப் சேவிங் சொசைட்டி பொதுநலவாய அமைப்பும் இலங்கை உயிர்காப்புச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ருவான் ரூபசேன, கடற்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமிந்த கருணாசேன, இலங்கை உயிர்காப்புச் சங்கத்தின் தலைவர் அதுல சேனாரத்ன மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.










