8.4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நிராகரித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பொஸ்பேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தனியார் நிறுவனங்களிடமிருந்து 8.4 மில்லியன் ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொஸ்பேட் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு உரிமங்களை வழங்கியதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலேயே இந்த இலஞ்சக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் இன்று முற்பகல் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.










