மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் 58 வயதுடைய சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கிப் பயணித்த 05ஆம் இலக்க வழித்தடப் பேருந்தை சாரதி செலுத்திச் சென்றபோது, சங்கராஜ மாவத்தையில் சோதனையிடுவதற்காக மருதானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸார் பேருந்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
எனினும், பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தை தொடர்ந்து செலுத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து, பொலிஸார் பேருந்தைப் பின்தொடர்ந்து சென்று அதனை நிறுத்தியுள்ளனர்.
இதன்போது, சாரதி மதுபோதையில் இருப்பதாகச் சந்தேகித்த பொலிஸார் அவரைக் கைது செய்து மேலதிக பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது அவர் மதுபானம் அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாரம்மல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய சந்தேகநபர், கொழும்பு புதுக்கடை இலக்கம் 07 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது, அவருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்துச் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (படம் AI)










