இலங்கை பொலிஸார் தமது கைரேகை மற்றும் முக அடையாளம் காணும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
பிரான்ஸின் லியோன் நகரில் அமைந்துள்ள சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலின் (INTERPOL) பொதுச் செயலகத்தில் நவம்பர் 17 முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்ற மூன்றாவது சர்வதேச கைரேகை மற்றும் முக அடையாளம் காணும் தொழில்நுட்ப மாநாட்டிலேயே இலங்கை பொலிஸார் தமது தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
80 நாடுகளைச் சேர்ந்த 170 இற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டில், இலங்கை சார்பில் குற்றப் பதிவுப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ருவன் குமார கலந்துகொண்டு விளக்கமளித்துள்ளார்.
இதன்போது, ‘வளங்களைக் கடந்து புதுமை’ (Innovation Beyond Resources) என்ற தொனிப்பொருளில், இலங்கையின் தானியங்கி கைரேகை அடையாளம் காணும் முறைமை (AFIS) மற்றும் தானியங்கி முக அடையாளம் காணும் முறைமை (AFRS) தொடர்பான விளக்கக்காட்சியை அவர் முன்வைத்துள்ளார்.
நிதி மற்றும் வளப் பற்றாக்குறைகள் காணப்பட்ட போதிலும், உள்நாட்டுத் தொழில்நுட்ப நிபுணத்துவம், கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப வளங்கள் மற்றும் புத்தாக்கத் தீர்வுகளைப் பயன்படுத்தி இலங்கை பொலிஸார் அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை மேம்படுத்திய விதம் குறித்து இதன்போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு, இலங்கை பொலிஸார் தமது செயற்பாட்டு அனுபவங்களையும் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் சர்வதேச பொலிஸ் பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பை வழங்கியதுடன், உயிரியல் அடையாளத் தொழில்நுட்ப நிபுணர்களுடன் அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளவும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன பொலிஸ் சேவையின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பப் புத்தாக்கங்களை முன்னெடுப்பதில் இலங்கை பொலிஸார் கொண்டுள்ள ஆர்வத்தையும் இந்தப் பங்கேற்பு வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.










