வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முன்னாள் மதிப்பீட்டு அதிகாரி ஒருவருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவர் நடைமுறையில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அதிகாரியின் குடியியல் உரிமைகளை ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு குறித்த அதிகாரி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அனுராதபுரம் அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வர்த்தகர் ஒருவரின் வருடாந்த வரி மதிப்பீட்டைக் குறைத்துக் கொடுப்பதற்காக 4 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரியதுடன், பின்னர் 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC), குறித்த முன்னாள் அதிகாரிக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது.
நீண்டகால விசாரணையின் பின்னர், நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனையடுத்து, ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், குற்றவாளியின் முதிர்ந்த வயது மற்றும் மருத்துவப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, அனைத்து சிறைத்தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவரது மொத்த சிறைத்தண்டனைக் காலம் நான்கு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா மற்றும் 20 ஆயிரம் ரூபா என இரண்டு தனித்தனி அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. குறித்த அபராதத் தொகைகளைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக 14 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தண்டனை அறிவிப்பின்போது, குற்றவாளி 40 ஆண்டுகள் அரச சேவையில் பணியாற்றியவர் என்றும், தற்போது பல்வேறு மருத்துவப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்த பிரதிவாதித் தரப்பு, தண்டனையில் கருணை காட்டுமாறு கோரிக்கை விடுத்தது.
எனினும், அரச அதிகாரிகளிடையே ஊழல் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், ஏனைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கையாக அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் வலியுறுத்தினர்.
அரசாங்கத்தின் வருமானத்தைச் சேகரிக்கும் பொறுப்பைக் கொண்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இலஞ்சம் பெறும் இத்தகைய செயற்பாடுகளைச் சாதாரணமாகக் கருத முடியாது என நீதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், முன்னாள் அதிகாரியின் குடியியல் உரிமைகள் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட உரிய அரச நிறுவனங்களுக்கு அறிவிக்குமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த இலஞ்சச் சம்பவம் இடம்பெற்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









