சர்வதேச ஊடகங்களுக்கு தலிபான் அரசு தடை

ஆப்கனில் பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். அதன்பின்னர் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு கல்வி, வேலை மற்றும் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்து வருகின்றன. இதற்கு உலக நாடுகளும் கண்டனம் விதித்து வருகின்றன.

ஏற்கெனவே ஊடகங்களைப் பொருத்தவரை 40% வரையிலான ஊடகங்கள் ஆப்கனில் மூடப்பட்டு விட்டன.

இந்நிலையில், பிபிசி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் (German Deutsche Welle), சீன(China Global Television Network) ஊடகங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பப்படும் அனைத்து சர்வதேச ஊடகங்களின் நிகழ்ச்சிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

பெர்ஷியன், பாஸ்தோ, உஸ்பெக் மொழி நிகழ்ச்சிகளுக்கு சுமார் 60 லட்சம் பார்வையாளர்கள் இருப்பதால் தலிபான் அரசு இந்த தடையை நீக்க வேண்டும் என்று பிபிசி வலியுறுத்தியுள்ளது.

தற்போதுவரை 40% ஊடகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் 6,400 பத்திரிகையாளர்கள் வேலையிழந்துள்ளதாகவும் வேலையிழந்தவர்களில் 805 பேர் பெண்கள் என்றும் அங்குள்ள ஊடக அமைப்பு கூறியுள்ளது.

மேலும் ஊடகங்களில் தற்போது வேலை செய்யும் பெண்கள் முழுமையாக ஹிஜாப் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.