கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக சுமார் ஒரு கிலோகிராம் நகைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 51 வயதுடைய இலங்கை வர்த்தகருக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கண்டி, பள்ளேகலையைச் சேர்ந்த குறித்த பயணி, நேற்று சனிக்கிழமை டுபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பொதிகளில் மொத்தம் 996 கிராம் நகைகள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 3.65 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த பயணியும் கைப்பற்றப்பட்ட நகைகளும் மேலதிக விசாரணைகளுக்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நீடித்த முறையான சுங்க விசாரணையைத் தொடர்ந்து, நகைகளை அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டதுடன், குறித்த பயணிக்கு 37 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.










