இலங்கை விமானப்படைக்கு (SLAF) சொந்தமான Antonov AN-32 விமானங்களைப் பயன்படுத்தி பயிற்சி நிகழ்ச்சிகள், விமானப் பரிசோதனைப் பயிற்சிகள் மற்றும் நடைமுறை அனுபவங்களை வழங்குவதாகக் கூறி வெளியிடப்படும் அனுமதியற்ற விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
“Flight Garage” மற்றும் “Nextgen Engineers’ Force” உள்ளிட்ட பெயர்களில் இயங்கும் மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள், விமானப்படையின் அனுமதியின்றி இத்தகைய பயிற்சி நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தி வருவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
குறித்த பயிற்சிப் பட்டறைகள், நிறுவனங்கள் அல்லது பதிவு நடவடிக்கைகளுடன் இலங்கை விமானப்படைக்கு எவ்வித தொடர்பும், கூட்டாண்மையும் அல்லது பங்களிப்பும் இல்லை என விமானப்படை வலியுறுத்தியுள்ளது.
விமானப்படை விமானங்களை பார்வையிடுதல் அல்லது விமானப் பராமரிப்பு தொடர்பான நடைமுறைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி மூன்றாம் தரப்பினருக்கு பணம் செலுத்தவோ, பதிவு கட்டணம் செலுத்தவோ அல்லது தனிப்பட்ட தகவல்களை வழங்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமானப்படையின் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் பயிற்சி அல்லது கல்வி வாய்ப்புகள் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் ஊடாக மட்டுமே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், அவ்வாறான விளம்பரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.










