கிரிஷ் நிறுவனத்துடனான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை டிசம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு (CIABOC) கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், அடுத்த வழக்கு விசாரணை தினத்திலும் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வழக்கு விசாரணையின்போது, நாமல் ராஜபக்ஷவைப் பிணையில் விடுவிக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்தப் பிணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த நவம்பர் 18ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதேவேளை, இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை டிசம்பர் 1ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்திலுள்ள காணியை பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்திற்கு மாற்றுவதுடன் தொடர்புபட்டதாகக் கூறப்படும் 100 மில்லியன் ரூபாய் இலஞ்சத்தை நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டே இந்த வழக்குடன் தொடர்புடையதாகும்.
குறித்த காணியை நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இந்தப் பணம் இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 1ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.










