2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஏழு நாட்களாக நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து இந்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதனையடுத்து, நவம்பர் 13ஆம் திகதி ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நிறைவடையவுள்ளது. இதன் பின்னர் மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
இந்த விவாதம் டிசம்பர் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், சனிக்கிழமைகள் நான்கையும் உள்ளடக்கிய 19 நாடாளுமன்ற அமர்வு நாட்களில் விவாதங்கள் இடம்பெறவுள்ளன.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட விவாதங்கள் நடைபெறும் ஒவ்வொரு நாளும், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து, சனிக்கிழமைகள் உட்பட நாடாளுமன்ற அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










