கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிஷாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை மக்கள் வங்கியினால் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், அவர்களின் கல்விச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் அடைவுகளையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை மக்கள் வங்கியின் வியாபார ஊக்குவிப்பு அதிகாரி, உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத் மற்றும் மாணவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் சாதனைகள் பாராட்டப்பட்டதுடன், எதிர்காலத்திலும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
மாணவர்களின் கல்வி அடைவுகளை அங்கீகரித்து, அவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் மக்கள் வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாடு பாடசாலைச் சமூகத்தினரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.










