சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள், விதைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை காரில் எடுத்துச் சென்ற 33 வயதுடைய சந்தேகநபர் கட்டுநாயக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை அதிகாலை கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போக்குவரத்து சமிக்ஞை சந்திக்கு அருகில் குறித்த காரை இடைமறித்து சோதனையிட்ட பொலிஸார், அதில் எடுத்துச் செல்லப்பட்ட சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட காரையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஆரம்பத்தில் விமான நிலைய பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










