காலி மற்றும் காங்கேசன்துறைக்கு இடையில் பயணிகள் படகுச் சேவையை ஆரம்பித்தல், திரைப்பட சுற்றுலாத்துறையை (Film Tourism) ஊக்குவித்தல் மற்றும் ‘Southern Mist Corridor’ சுற்றுலா வலயத்தை உருவாக்குதல் உள்ளிட்ட மூன்று முக்கிய திட்டங்கள் குறித்து சுற்றுலாத்துறைக்கான ஜனாதிபதி பணிக்குழு கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கடல்சார் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், காலி மற்றும் காங்கேசன்துறையை (KKS) இணைக்கும் வகையில் புதிய படகுச் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான முன்மொழிவு முதலீட்டு சபையிடம் (BOI) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச திரைப்படப்பிடிப்புத் தளமாக மாற்றி, அதன் மூலம் சுற்றுலாத்துறையை வலுப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது.
இதற்கென புதிய சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதுடன், அது நடைமுறைக்கு வரும் வரை ஒப்புதல் செயல்முறைகளைக் கண்காணிக்க விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை இணைத்து புதிய சுற்றுலா வலயமொன்றை உருவாக்குவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் விசேட வழிநடத்தல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை பன்முகப்படுத்தி, அதன் நீண்டகால நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த புதிய திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த முக்கிய பங்குதாரர்கள் பலரும் கலந்துகொண்டனர்.