மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் முன்கூட்டிய நேர ஒதுக்கீட்டு முறையின் கீழ் மாத்திரமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பும் பொதுமக்கள் தமக்கான திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, நாளாந்தம் வழங்கப்படும் நேர ஒதுக்கீடுகளின் எண்ணிக்கை முன்னர் இருந்ததை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சேவைகளை விரைவாகவும் இலகுவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 011 2 117 116 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ முன்கூட்டிய நேர ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
புதிய நடைமுறை எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதால், அன்றிலிருந்து நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்திற்கு அதிகாலை முதல் தேவையற்ற வகையில் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களின் வசதியை மேம்படுத்துவதற்கும், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்கும் இந்த முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற விமானப்படை வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனவே, பொதுமக்கள் அசௌகரியங்களைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில், நாரஹேன்பிட்டி தலைமை அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.










