உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் முக்கிய அமைப்பான ஓபெக் (OPEC) மற்றும் அதன் நட்பு நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் பிளஸ் (OPEC+) ஆகியவற்றிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகுவதாக அறிவித்துள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச எரிசக்தி சந்தை ஏற்கனவே கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், அமீரகத்தின் இந்த வெளியேற்றம் உலகப் பொருளாதாரத்தில் மேலதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஓபெக் அமைப்பின் நடைமுறை ரீதியான தலைவராகச் செயல்படும் சவுதி அரேபியாவிற்கு, அமீரகத்தின் இந்த முடிவு ஒரு பாரிய சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எண்ணெய்ச் சந்தையில் செல்வாக்கு செலுத்துவதற்குத் தேவையான மேலதிக உற்பத்தித் திறனை (Spare Capacity) கொண்டுள்ள மிகச்சில நாடுகளில் அமீரகமும் ஒன்றாகும்.
சந்தையில் விலைகளைக் கட்டுப்படுத்த அல்லது விநியோகத்தை அதிகரிக்க ஓபெக் பயன்படுத்தும் மிக முக்கியமான ஆயுதமாக இந்த மேலதிக உற்பத்தித் திறன் இருந்து வந்தது.
அமீரகத்தின் வெளியேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வல்லுநர்கள், “ஓபெக் அமைப்பில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
சவுதி அரேபியாவுடன் இணைந்து சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் செல்வாக்கைக் கொண்டிருந்த அமீரகம் விலகுவது, அந்த அமைப்பின் சந்தைக் கட்டுப்பாட்டு வலிமையைக் குறைக்கும்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.