முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பை (National Policy Framework for Higher Education) உருவாக்குவதற்காக பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் வழிகாட்டுதலின் கீழ், உயர்கல்விக்கான தேசிய கொள்கை கட்டமைப்பை தயாரிக்கும் பணிகள் நிபுணர்கள் குழுவொன்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்கான பல கட்ட கலந்துரையாடல்கள் அண்மையில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உயர்கல்வி தொடர்பான இந்த தேசிய கொள்கை கட்டமைப்பு குறித்து பொதுமக்களின் கருத்துகளையும் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காக உயர்கல்விப் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.mohe.gov.lk இல் இணையவழி வினாக்கொத்து (Online Questionnaire) ஒன்றும் பதிவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் https://mohe.gov.lk/survey.html என்ற இணைப்பின் ஊடாக தங்களது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.