மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
அணிசார்பாக பாத்திமா சனா 37 ஓட்டங்களையும், முனீபா அலி 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சேதனா விமுக்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 18.4 ஓவர்கள் முடிவில் ஒரேயொரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அதிரடியாக விளையாடிய சமரி அத்தபத்து 94 ஓட்டங்களையும், விஷ்மி குணரத்ன ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.