குற்றவியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட புதிய திருத்தம் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் கடுமையான அநீதியை ஏற்படுத்துகிறது. உடனே இதனை மாற்றவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேற்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
2024 பெப்ரவரி 13 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவியல் சட்டத்தின் பிரிவு 363 மற்றும் 364, பிரிவு 19 திருத்தச் சட்டத்தின் மூலம் உடலுறவுக்கான பெண்களின் பாலின வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைத்தல், 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனைகளை குறைத்தல் போலவே 363 என்ற திருத்தத்தின் மூலம் ஆண், பெண் பலாத்காரத்தை ஒரே பிரிவில் கொண்டு வருவது குறித்து பெண்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தை திருத்துவதற்கான சட்ட முன்வரைவு கடந்த பெப்ரவரி 13 அன்று வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் உத்தரவின்படி, குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 ஐத் திருத்தியமைத்து வெளியிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, 14 முதல் 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை தனது சம்மதத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் தண்டனையை எளிதாக்க முன்மொழியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நீதியமைச்சர் மற்றும் பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் உடன்படவில்லை என அறிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், குற்றவியல் சட்டத்தின் 19 வது அத்தியாயத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ள திருத்தங்களை உடனடியாக இடைநிறுத்துமாறு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் நீதியமைச்சரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.