வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸ் நாட்டிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் கையெழுத்தாகவுள்ளன.
அமைச்சர் விஜித ஹேரத் மே 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை பெலாரஸ் குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, வான்வழிச் சேவைகள், உயர்கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மூன்று முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கையெழுத்தாகவுள்ள முக்கிய உடன்படிக்கைகள் பின்வருமாறு:
இலங்கை அரசாங்கத்திற்கும் பெலாரஸ் அரசாங்கத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம்.
இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கும் பெலாரஸ் கல்வி அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கும் பெலாரஸ் சுகாதார அமைச்சுக்கும் இடையிலான சுகாதார ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
இந்த உடன்படிக்கைகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.