இலங்கையில் நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், உயிர்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் ஒரு தேசிய பொறிமுறையை உருவாக்குவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
பொது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நீர் தொடர்பான மரணங்களைக் குறைக்கவும் பல்துறை சார்ந்த ஒரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும்.
நீரில் மூழ்கி உயிரிழப்பது வெறும் சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, அது ஒரு தேசியப் பாதுகாப்பு விவகாரமுமாகும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், நாட்டின் நற்பெயருக்கும் முறையான நீர் பாதுகாப்பு பொறிமுறை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை தேசிய பாடத்திட்டத்தில் இணைக்க கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன முன்மொழிந்தார்.
உயிர்காப்புப் பணிகளில் இளைஞர்களைப் பயிற்றுவித்து, ஒரு தன்னார்வ வலையமைப்பை உருவாக்குவது குறித்து இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேநாயக்க கருத்து வெளியிட்டார்.
இக்கூட்டத்தில் கடற்படை, விமானப்படை, இராணுவம், கடலோர பாதுகாப்புப் படை, பொலிஸ் மற்றும் பேரிடர் மேலாண்மை நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
இந்த புதிய பொறிமுறையானது உள்ளூர் மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.