-மன்னார் நிருபர்-
இந்தியாவின் தங்கச்சிமடம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏலக்காய் மூட்டைகளை இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸார் பறிமுதல் செய்ததுடன் வீட்டின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
தங்கச்சிமடம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் ஏலக்காய், சுக்கு, வெளிநாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை தங்கச்சிமடம் – அய்யன் தோப்பு கடற்கரை கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
இதன் போது வீட்டில் இலங்கைக்கு படகில் கடத்தி செல்வதற்காக 7 மூட்டைகளில் 175 கிலோ ஏலக்காய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஏலக்காய் மூட்டைகளை பறிமுதல் செய்து தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக தலைமறைவான வீட்டின் உரிமையாளரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.