பத்தேகம ஹல்பெத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
அம்பலாங்கொடையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் நேற்று திங்கட்கிழமை இரவு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண், துப்பாக்கிச் சூட்டில் ஏற்கனவே உயிரிழந்த 47 வயதுடைய “களு நோனா” என அழைக்கப்பட்ட பெண்ணின் தாயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பத்தேகம ஹல்பெத்தொட்ட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. காரில் பயணித்த குழுவொன்று முச்சக்கரவண்டியை துரத்திச் சென்று அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரிகள் T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு பெண்களும் முதலில் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதனையடுத்து 47 வயதுடைய பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது தாயார் நேற்று இரவு வரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான “லொகு பெட்டி” என்பவரால் நடத்தப்படும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் 47 வயதுடைய பெண் முக்கிய உறுப்பினராக இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் அவர் வழக்கொன்றையும் எதிர்கொண்டிருந்தார். மேலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பத்தேகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி கையொப்பமிடுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த உத்தரவுக்கு அமைய வாடகை முச்சக்கரவண்டியில் பத்தேகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்ற அவர், மீண்டும் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










