பதுளை-செங்கலடி பிரதான வீதியில் 5 ஆவது நாளாக தொடரும் போக்குவரத்து தடை

-பதுளை நிருபர்-

பதுளை-செங்கலடி பிரதான வீதியில் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவினால் தொடர்ந்தும் 5 ஆவது நாளாக இன்று வெள்ளிக்கிழமை அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் விழுந்துள்ள பாரிய கற்களை அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை குறித்த வீதியை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டாலும் சில தினங்களுக்கு தொடர்ந்தும் மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும், வீதி திறக்கப்பட்ட பின்னர் அவ்வீதியூடாக பயணிக்கும் வாகனங்களின் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

போக்குவரத்து தடைப்பட்டுள்ள குறித்த வீதி தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள, வீதி அபிவிருத்தி அதிகார சபை, மாவட்ட செயலகம், பசறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு இன்று காலை கலந்து ஆலோசித்து பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது

நடைமுறை சாத்தியக்கூறுகளுக்கு அமைவாக குறித்த வீதி திறக்கப்படும்

அத்துடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படவுள்ள வீதியானது தேவை ஏற்படின் மீண்டும் மூடப்படும், அதற்கான அனைத்து அதிகாரங்களும் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது, என பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்