நாட்டில் இடம்பெற்ற நிலக்கரி கொள்வனவு பரிவர்த்தனைகள் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளை ஆராயும் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் பி. வி. பந்துலசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நிலக்கரி கொடுக்கல் வாங்கல் முறைகேடுகள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக 28 புகார்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
நிலக்கரி கொள்வனவு தொடர்பான முறைகேடுகள் மற்றும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் கட்டளைப் பத்திரத்திற்கு அமைவாக இந்த 28 முறைப்பாடுகளும் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றன.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் தன்மை மற்றும் அவற்றின் உள்ளடக்கத்தின் தீவிரத்தன்மையைக் கருத்திற் கொண்டு, தேவைப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் எனச் செயலாளர் பி. வி. பந்துலசேன மேலும் தெரிவித்துள்ளார்.