மக்காத மற்றும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், செங்கலடி பகுதியில் இன்று திங்கட்கிழமை விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்கு உட்பட்ட உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்கு வைத்து இந்த அதிரடிப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தையில் விற்பனை செய்வதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு முற்றாகத் தடை செய்யப்பட்ட உணவுப் பொதித் தாள்கள் (Lunch sheets), ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள் (Plastic one-day cups) மற்றும் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் (Plastic straws) ஆகியவற்றை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் இதன்போது இனங்காணப்பட்டன.

இவ்வர்த்தகர்களுக்கு எதிராக முதற்கட்டமாக, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் குறித்தும், அதற்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள் குறித்தும் விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அத்துடன், சட்டத்தை மீறி தொடர்ந்து இவற்றை விநியோகிப்பவர் மற்றும் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் உத்தியோகத்தர்களால் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
எதிர்காலத்திலும் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வர்த்தகர்களும் பொதுமக்களும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றாகத் தவிர்த்து முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
