“சிங்க பெண்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அரச அதிபர்

 

-மன்னார் நிருபர்-

 

மன்னார் மாவட்டத்தில் மகளிர் தின விழாவும், சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் நகர சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழகத்தின் பால் நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் இலங்கை ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்பன இணைத்து மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் இந்த விழா இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி சி.தே. தேவராஜா, மடு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அ.சி.வொலன்ரைன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி நிஷாந்தினி நடராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பிரதேச செயலாளர்கள், அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது, நிகழ்வுகள் இடம் பெற்றதோடு, சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கல் விழா, மூத்த பெண்கள் கௌரவம் வழங்கும் நிகழ்வு மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்வுகளும் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலிற்கு மன்னார் இந்து மத பீடத்தால் ‘சிங்க பெண்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.