மட்டக்களப்பு மாநகர சபையின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன பொது நூலக கட்டட வளாகம், எதிர்வரும் 20 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
முற்பகல் 9.30 மணிக்கு நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திறப்பு விழா நிகழ்வில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நூலகத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இந்த விழா நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு பிரைன் றீவ் வீதியில் அமைந்துள்ள இந்த புதிய பொது நூலக வளாகம், பிராந்தியத்தின் கல்வி மற்றும் அறிவுசார் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தற்போது மட்டக்களப்பு மாநகர சபையினால் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.