பொலித்தீன் பைகளுக்காக தற்போது நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் தனியார் வர்த்தகர்களின் கணக்குகளுக்குச் செல்வதைத் தடுத்து, அவற்றை அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரி நிதியத்திற்கு மாற்றுமாறு சுற்றுச்சூழல் நீதி மையம் மேல் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான மனு நேற்று வெள்ளிக்கிழமை நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடை செய்ததுடன், பையின் அளவிற்கேற்ப 3 ரூபாய் மற்றும் 5 ரூபாய் கட்டணம் அறவிடுமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி வசூலிக்கப்படும் பணம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரிச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் நிதியத்திற்குச் செல்ல வேண்டும்.
ஆனால், தற்போது தனியார் கடை உரிமையாளர்களும் வர்த்தக நிலையங்களுமே இப்பணத்தைத் தமதாக்கிக் கொள்வதாக CEJ சுட்டிக்காட்டியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய இப்பணம் தனியார் கணக்குகளுக்குச் செல்வது சட்டவிரோதமானது எனவும், இது பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் சுற்றுச்சூழல் நீதி மையம் வாதிட்டது.
எனவே, பொலித்தீன் பைகளுக்கான கட்டண நடைமுறை தொடர வேண்டும், ஆனால் அந்தப் பணம் முறையாக அரசாங்க நிதியத்திற்குச் சேருவதை உறுதி செய்யுமொரு பொறிமுறையை நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த மனுவின் அடுத்தகட்ட விசாரணை வரும் 2026 நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.