மட்டக்களப்பு, சின்ன ஊறணி அருள்மிகு ஸ்ரீ ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பக்திப் பெருக்குடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
இன்று காலை 7.00 மணியளவில் ஆலயத்தின் பிரதம பூசகர் சிவஸ்ரீ ந.வே.பொன்னுத்துரை தலைமையில் அம்பாளின் திருக்கதவு திறக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.

இத்திருக்கதவு திறக்கும் புனித நிகழ்வில் அம்பாளின் அருளினைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சடங்கு உற்சவத்தின் தொடர்ச்சியாக, நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் சின்ன ஊறணி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மங்களப் பொருட்கள் மற்றும் அடையாளப் பொருட்கள் பக்திப் பூர்வமாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஊர் வளமாகச் சென்று ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

இவ் வருடாந்த சடங்கு உற்சவமானது நேற்று முதல் தொடர்ந்து 8 நாட்கள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த உற்சவ காலங்களில் தினசரி மதியம் 1.30 மணிக்கும், அதிகாலை 4.00 மணிக்கும் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை வருகின்ற 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ‘பள்ளிச் சடங்கு’ நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து சத்துருக்கொண்டான் செந்தாமரை தீர்த்தக் குளத்தில் அம்பாளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தமாடும் தீர்த்தோற்சவ நிகழ்வும், விசேட பூஜைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
