தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் தமது 91ஆவது வயதில் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் உடல் நலக்குறைவினால் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று ஞாயிற்று கிழமை இரவு 11 மணியளவில் காலமாகியுள்ளார்.
தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத மூத்த அரசியல்வாதியான இரா.சம்பந்தன் 1933ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி திருகோணமலையில் பிறந்து யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி (St. Patrick’s College), மொரட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணி ஆனார்.
லீலாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
சம்பந்தன் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
1983ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தனர்.
இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தின் படி தனி நாடு கோருவதற்கு ஆதரவளிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தமைக்காகவும், 1983 கறுப்பு சூலை நிகழ்வுகளில் மூவாயிரத்திற்கும் அதைகமான தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டதற்கும், அவர்களது உடைமைகள் சேதமாக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தும் அவர்கள் நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்தனர்.
மூன்று மாதங்கள் தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றாமல் போனதால் சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை 1983, செப்டம்பர் 7 இல் இழந்தார்.
1989 நாடாளுமன்றத் தேர்தலில் சம்பந்தன் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டமைப்பின் வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டார். கூட்டணியின் வேட்பாளர் எவரும் இம்மாவட்டத்தில் வெற்றி பெறவில்லை.
2001 ஆம் ஆண்டில் தவிகூ, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எஃப்), டெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற புதிய கூட்டணிக் கட்சி ஒன்றை ஆரம்பித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாத படியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கப்பட்ட சிறிது காலத்தில் விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்குச் சார்பாக தனது நிலைப்பாட்டினை முன்னெடுத்தது. இந்நிலைப்பாட்டுக்கு தவிகூ தலைவர் வி. ஆனந்தசங்கரி எதிர்ப்புத் தெரிவித்து கூட்டமைப்பில் இருந்து விலகினார்.
அத்துடன், 2004 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை.[10] இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004, 2010, 2015,2020 நாடாளுமன்றத் தேர்தல்களில் சம்பந்தன் திருகோணமலைத் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 தேர்தலில் முக்கிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக), ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார்.
பின்னர் 2020ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு அவர் தெரிவானார்.
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு 3 மாதக் கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.
சுகவீனமடைந்துள்ளமையினால் அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அண்மைய நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு காலமானார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கொழும்பில் மலர்சாலையில் வைக்கப்பட்டு அதன்பின்னர் அவரது பூதவுடல் நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்