தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார்: அங்கஜன் இராமநாதன்

-யாழ் நிருபர்-

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயாராக இருப்பதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக தொடரும் சிக்கல் நிலை தொடர்பில் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன்.

வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் மின்சார மாற்றீடுகள் இல்லாததாலும், அதற்கான மின்பிறப்பாக்கிகள் வழங்கப்படாத நிலையாலும் மருத்துவ பயன்பாடுகள் அற்ற நிலையில் காணப்படுவதாக கடந்த நாட்களில் அறிய முடிந்தது.

இத்தகைய சூழலில் குறித்த பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்து வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியத்தையும் உணர்ந்து, இவ்விடயம் தொடர்பில் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.

அதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தால் போதிய மின்பிறப்பாக்கி வசதிகள் வழங்கப்படும்வரை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கிகளை தற்காலிக ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்க அன்பர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.

இதனூடாக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவற்றை இயங்குநிலைக்கு கொண்டுவந்து மக்களுக்கான வைத்திய சேவையை வினைத்திறனுடன் வழங்கமுடியும் என கருதுகிறேன்.

எனவே இதுதொடர்பில் வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் ஆறுமுகம், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.எஸ்.டி பாதிரனா, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியோரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்