கட்டார் எயார்வேஸ் நிறுவனம் டோஹா மற்றும் கொழும்புக்கு இடையிலான தனது விமான சேவைகளை இன்று புதன்கிழமை முதல் முழுமையாக மீள ஆரம்பித்துள்ளது.
இதன்படி, தினசரி 5 விமான சேவைகள் என்ற அடிப்படையில் வாராந்தம் மொத்தம் 35 விமான சேவைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குக் கட்டார் எயார்வேஸ் நடத்தவுள்ளது.
இந்த முழுமையான சேவைகளின் மீள்வருகையானது இலங்கையின் சுற்றுலாத்துறை, வர்த்தகப் பயணங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், தோஹா ஊடாக மத்திய கிழக்கு, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கான விமான இணைப்புகளையும் பயணிகள் இதன் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கட்டார் எயார்வேஸின் இந்த விமான சேவை அதிகரிப்பானது இலங்கையின் வான்வெளி இணைப்பை வலுப்படுத்துவதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணியர் போக்குவரத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.