2026 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட மேசைப்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு, மாணவர்களைத் தயார்படுத்தும் வகையிலான மாகாண மட்ட பயிற்சிச் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியானது, எதிர்வரும் ஜூன் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண மட்ட மேசைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான இறுதித் தெரிவுப் போட்டியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாகாண மட்டப் போட்டிகளுக்கு ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து மாணவ, மாணவியரையும் உள்ளடக்கி இச்சுற்றுப்போட்டி நடத்தப்படுகிறது. இன்றைய தினம் ஆண்கள் பிரிவில் 18 போட்டிகளும், பெண்கள் பிரிவில் 14 போட்டிகளும் என மொத்தம் 32 போட்டிகள் 7 மேசைகளில் மிகச் சிறப்பான முறையில் ஒழுங்கு செய்யப்பட்டு, போட்டித் தொடர் சுறுசுறுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாகாண மற்றும் தேசிய மட்ட மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் எமது வலய மற்றும் மாகாண மாணவர்கள் அதிகளவிலான வெற்றிகளைப் பெற்று சாதனை படைப்பதே இச்சுற்றுப்போட்டியின் பிரதான நோக்கமாகும். இதன் ஊடாக மாணவர்கள் தங்களது விளையாட்டுத் திறன்களையும், நுட்பங்களையும் மேலும் வளர்த்துக் கொள்ள முடியும்” என ஏற்பாட்டுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தற்போது போட்டிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்று வருவதுடன், பொறுப்பதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த வழிகாட்டல்களுக்கு அமைவாக மாணவர்கள் தங்களின் திறமைகளைத் தீவிரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
