ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகளைச் சிறையில் கழித்த ஏ.ஜி. பேரறிவாளன், தற்போது தனது வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
2022ஆம் ஆண்டு விடுதலையான அவர், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சட்டத்தரணியாக தனது பணியை ஆரம்பித்துள்ளார்.
விடுதலையான பிறகு பெங்களூருவில் உள்ள கலாநிதி பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
2025 ஆம் ஆண்டு அகில இந்திய பார் பரீட்சையில் (All-India Bar Examination) சித்தியடைந்தார்.
தற்போது 54 வயதாகும் அவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் அசோசியேஷனில் (Bar Association of Tamil Nadu and Puducherry) உத்தியோகபூர்வமாக சட்டத்தரணியாகப் பதிவு செய்துகொண்டார்.
பேரறிவாளன் கைது பின்னணி
1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, பேரறிவாளனுக்கு வயது வெறும் 19 மட்டுமே. ஒரு சிறிய விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும், அடுத்த நாள் திரும்பி வருவார் என்றும் கூறி பொலிஸார் அவரை அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர் சிபிஐ (CBI) காவலில் வைக்கப்பட்டார். 59 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என்பது கூட அவரது குடும்பத்தினருக்குத் தெரியவில்லை.
ராஜீவ் காந்தியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட குண்டிற்காக 9 வோல்ட் மின்கலத்தை (Battery) வாங்கி வழங்கியதாகப் பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஒரு கடைக்காரர் வழங்கிய சாட்சியமே இதற்கான முக்கிய ஆதாரமாகக் கொள்ளப்பட்டது. பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (TADA) கீழ் இந்த வழக்குத் தொடரப்பட்டது.
1998: டாடா (TADA) நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
1999: இந்திய உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.
2014: அவரது கருணை மனு மீது முடிவெடுக்க இந்திய அரசாங்கம் 11 ஆண்டுகள் தாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றம் அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
பேரறிவாளனின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்தின் பயனாக, 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பிறகு, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 142 (Article 142) இன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 2022 மே 18 அன்று அவரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைவாசம் அவரது கல்வி ஆர்வத்தைத் தடுத்து நிறுத்தவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் செய்த சாதனைகள் வியக்கத்தக்கவை:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா படிப்பில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
பிளஸ் டூ (+2) தேர்வில் 1,200 இற்கு 1,096 புள்ளிகளைப் பெற்று கைதிகளிடையே முதலிடம் பிடித்தார்.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (IGNOU) கணினி பயன்பாடுகளில் இளங்கலை (BCA) மற்றும் முதுகலை (MCA) பட்டங்களை முடித்தார். அத்துடன் 7 மேலதிக டிப்ளோமா படிப்புகளையும் நிறைவு செய்தார்.
இவற்றில் சிலவற்றை அவர் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த காலப்பகுதியிலேயே முடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலையான பின், பெங்களூருவில் உள்ள கலாநிதி பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த அவர், 2025 இல் அகில இந்திய பார் தேர்வில் சித்தியடைந்தார். தனது புதிய பயணம் குறித்து அவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (The Indian Express) நாளிதழுக்குத் தெரிவித்ததாவது:
“ஒரு புகழ்பெற்ற குற்றவியல் சட்டத்தரணியாவதே எனது லட்சியம் அல்ல. மாறாக, சட்ட உதவி கிடைக்காமல் சிறைக்குள் வாடும் ஆயிரக்கணக்கான கைதிகளின் குரலாக மாறுவதே எனது நோக்கம். குறிப்பாக, வறுமை காரணமாக நீதியைப் பெற முடியாமல், முன்கூட்டிய விடுதலைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்காக நான் பணியாற்றுவேன்.” என குறிப்பிட்டுள்ளார்.