உத்தியோகபூர்வ அறிவித்தல் இல்லை : மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதா? இல்லையா?

-சபீனா சோமசுந்தரம்-
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்று 26 ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
எனினும் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை 26 ஆம் திகதி முன்னெடுக்க உள்ளமை தொடர்பாக கடந்த நாட்களில் ஊடக சந்திப்புகளை ஆசிரியர் சங்கங்கள் நடாத்தி இருந்தன.
எனவே இந்த விடுமுறை போராட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இது தொடர்பில் அதாவது இன்று பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் நடைபெறுமா? இல்லையா? என்பது தொடர்பில் மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினால் எந்த ஒரு அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று நாடாளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளனர்.
அதன்பின் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறாது என தெரிவித்து மாணவர்கள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
பாடசாலை இன்று நடைபெறாது என்ற உத்தியோபூர்வ அறிவித்தல் கிடைக்காமல் எந்த பெற்றோரும் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் விடுவதில்லை. அதே போல தான் இன்று பாடசாலை நடைபெறாது என ஆசிரியரோ அதிபரோ அறிவிக்கைவில்லை அதனால் நான் பாடசாலைக்கு போக தான் வேண்டும் என்ற நிலையில் தான் பல மாணவர்கள் இருப்பார்கள்.
இப்படியிருக்கையில் இப்படியான போராட்டங்களை பாடசாலை சமூகங்கள் முன்னெடுக்கும் போது மாணவர்களின் நிலை தொடர்பில் அவர்கள் அக்கறை கொள்ளாதது ஏன்?
இலங்கையை பொறுத்த வரையில் இந்த நிலையான இன்று நேற்று அல்ல இது காலாகாலமாக தொடர்ந்து வருகின்றது.
ஆசிரியர்கள் அதிபர்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கை தொடர்பாக முறையான அறிவித்தல்கள் வழங்குவதில்லை.
மாணவர்கள் பாடசாலைக்கு வருவதும் பின்னர் திரும்பிச் செல்வதும் வழமையே.!
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு வரும் மாணவர்கள் அல்லது ஆரம்ப வகுப்புகளில் கற்கும் மாணவர்கள் சரியான நேரத்திற்கு பெற்றோர்கள் அழைத்து செல்ல வராவிட்டால் என்ன செய்வார்கள்?
பாடசாலைக்கு காலையில் பிள்ளையை கொண்டு வந்து விட்டு செல்லும் பெற்றோர் பாடசாலை முடியும் நேரத்திற்கு தான் அழைத்து செல்ல வருகிறார்கள். இந்நிலையில் பாடசாலையில் கற்றல் செயற்பாடுகள் நடக்காது என்று மாணவர்கள் திருப்பி அனுப்பப்படும் போது பெற்றோருக்காக காத்திருக்க வேண்டிய மாணவர்களின் நிலை என்ன?
அவர்களின் பாதுகாப்பு பாடசாலை சமூகத்தினாலோ அல்லது பெற்றோரினாலோ உறுதிப்பதுத்தப்படுகின்றதா?
எனவே இவ்வாறான உத்தியோகபூர்வமான போராட்டங்களை அதிபர் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போது ஆரம்ப பிரிவு வகுப்பு மாணவர்களுக்காவது பாடசாலை நடைபெறுமா? நடைபெறாதா? என்பது தொடர்பில் தெளிவான முடிவை பாடசாலை சமூகம் அறிவிக்க வேண்டும்.
அதைவிடுத்து நாட்டில் இந்த நிலை தொடருமானால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் ஏதாவது ஒரு பாடசாலையில் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடைபெறும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை சமூகமும் பாரிய ஒரு பொறுப்புக்கூறலை எதிர்கொள்ள நேரிடும் என்பது உண்மை!

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்