இந்திய முக்கியஸ்தர்களுக்கும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு

-அம்பாறை நிருபர்-

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 2024 தொடர்பான இந்திய அதிதிகளுடனான விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் நேற்று புதன்கிழமை இரவு அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது கலாநிதி ஏ.எல்.அன்சார் தலைமையில் நடைபெற்றதுடன் சிறப்பு அதிதியாக இக்ரா ஜலால் மற்றும் ஏனைய பிரதம அதிதிகளாக இந்தியாவின் முன்னாள் மாநில சட்ட சபை உறுப்பினர் கே.ஏ.எம் முஹம்மட் அபூபக்கர், இந்தியா தமிழ்நாடு சிரேஸ்ட ஊடகவியலாளர் எம்.ஏ.சாஹூல் ஹமீட், இந்தியா தமிழ்நாடு பகுதியை சேர்ந்த எம்.ரைய்னார் முஹம்மட் கடாபி, முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான், சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெஸ்மின், உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு 2024 தொடர்பாக ஆராயப்பட்டதுடன் பல்வேறு உதவிகளை இந்தியாவில் இருந்து பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக இந்திய அதிதிகள் இதன்போது குறிப்பிட்டனர்.அத்துடன் மாநாடு தொடர்பாக இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய அதிதிகள் தெரிவித்துள்ளதுடன் மாநாடு வெற்றி பெற பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டனர்.

2024 உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை முன்னிட்டு எமது மாநாட்டுக் குழுவின் அடுத்த கட்டம் பேராசிரியர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ள உள்ளதாகவும் பின்னர் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை மாவட்ட ரீதியாக ஒருங்கிணைப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உள்ளதாக கலாநிதி ஏ.எல்.அன்சார் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

இதன் போது இலங்கைத் தமிழ்எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்திய அதிதிகள் உள்ளிட்ட ஏனைய அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுச் சின்னத்துடன் கெளரவம் வழங்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்