கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்கு உட்பட பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவருடன் மல்லுக்கட்டி, அவரின் துப்பாக்கியைப் பறித்து, மற்றொரு அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் குறித்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சந்தேகநபரை கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த நிலையில், நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்றினால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 31 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரின் வசம் இருந்த பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியும், கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.
இவர் 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், தாக்குதலுக்குள்ளான மற்றைய பொலிஸ் அதிகாரி மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.