நேபாளத்தில் ‘துர்பே’ என்று அழைக்கப்படும் குரூர குணம் கொண்ட காட்டு யானை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உயிரைப் பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2012-ம் ஆண்டு, சநிச்சரா போட் என்பவரின் தந்தை மற்றும் தாயை இந்த யானை மிதித்துக் கொன்றது. இதனால், குடும்பத்தின் பாதுகாப்பிற்காகச் சொந்த கிராமத்தை விட்டு 9 கி.மீ தொலைவில் உள்ள ஜகத்பூர் பகுதிக்கு சநிச்சரா போட் இடம்பெயர்ந்தார். இடையில் ராப்டி ஆறு இருந்ததால், 14 ஆண்டுகளாக அந்த யானையிடமிருந்து தப்பித்து நிம்மதியாக வாழ்ந்து வந்ததாக அவர் நினைத்தார்.
ஆனால், கடந்த 12-ம் திகதி அந்த யானை மீண்டும் சநிச்சரா போட்டின் வீட்டிற்குள் புகுந்து, அவரது மருமகள் ஆஷிகா மற்றும் 4 வயது பேரன் பரத் ஆகியோரைக் கொடூரமாகக் கொன்றுள்ளது.
2010 முதல் கடந்த 16 ஆண்டுகளில், ‘துர்பே’ யானை மொத்தம் 25 பேரைத் தாக்கி கொன்றுள்ளது. இந்த யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க, 2016, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அதன் உடலில் ‘டிராக்கிங் காலர்’ பொருத்தப்பட்டிருந்தும், இந்தக் கொடூரத் தாக்குதல்களைத் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தங்களின் மொத்த குடும்பத்தையும் பலி கொண்ட அந்த யானையினை நினைத்து சநிச்சரா போட் கதறி அழுவது காண்போரை உருக்குகிறது.