தவறு செய்துவிட்டு போராட்டம் நடத்துவது நியாயமா? – இந்தியா மீனவர்களிடம் யாழ் மீனவர்கள் கேள்வி

-யாழ் நிருபர்-

இலங்கை கடலுக்குள் எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபடுவது தவறு என நன்கு தெரிந்தும் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய போராட்டம் நடத்துவது நியாயமா என யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் புனிதாப் பிரகாஷ் கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கோரி நேற்று திஙகட்கிழமை இடம்பெற்ற கண்டப் போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய கடற் தொழிலாளரினால் எமது வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தினமும் வாழ்வாதாரத்துக்காக போராடி வருகின்றனர்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவது சட்ட விரோதம் எனத் தெரிந்தும் தொடர்ச்சியாக எமது கடற் பரப்புக்குள் நுழைந்து எமது வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர்.

இவ்வாறு அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் போது கடற் படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களை விடுவிக்குமாறு இந்தியாவில் போராட்டம் நடத்துகிறார்கள்.

எமது வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்தியா மீனவர்களிடம் இருந்து எமது மீனவர்களை பாதுகாக்குமாறு கோரி போராட்டம் நடத்தும் நிலையில் இலங்கை கடலில் நுழையும் போது கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவிக்கப் போராட்டம் நடத்துவது நியாயமா?

ஆகவே இலங்கை கடற்படையை வினயமாக கேட்டுக்கொள்கிறோம், எல்லை தாண்டி மீன்படியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள், கடற்படைக்கு எமது பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்