-யாழ் நிருபர்-
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தென் மாகாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இறுதிப் போர் பற்றி விடையங்களில் உண்மைக்கு மாறான கருத்துக்களை முன் வைத்துள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சர்வதேச சட்ட விதிகளுக்கு அமைவாக தங்கள் இராணுவம் போரிட்டதாக கூறியுள்ளார். போர் நடைபெறும் போது சர்வதேச தொண்டு நிறுவனங்களை வலுக் கட்டாயமாக வெளியேற்றியதுடன் சர்வதேச சட்டங்களில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி அப்பாவிப் பொது மக்களை கொன்றொழித்த முல்லைத்தீவு சுதந்திரபுரத்திற்கு மக்களை செல்லுமாறு அறிவித்து விட்டு வெள்ளைக் கொடியை பறக்கவிட்டு மரங்களுக்கு கீழ் கூடியிருந்த மக்களை விமானத் தாக்குதலில் கொன்றொழித்தமை முள்ளிவாய்க்காலில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை சுட்டுப் படுகொலை செய்தமை சரணடைந்த சகோதரி இசைப்பிரியாவை பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உட்டுத்தி படுகொலை செய்தமை யாவும் சர்வதேச சட்ட விதிமுறையா?
இறுதிப் போரில் நாற்பதாயிரம் மக்கள் கொல்லபட்ட தகவல் போலியானது அப்படி என்றால் எலும்புக் கூடுகள் எங்கே? என்ற கேள்வியையும்எழுப்பியுள்ளார் சரத் பொன்சேகா.
தருஸ்மன் அறிக்கை இறுதிப் போர்க்களப் பார்வையின் பின்னரே வெளிவந்தது அவ் அறிக்கையில் நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கை வந்து 14 ஆண்டுகள் கடந்தபின் பித்தலாட்டம் விடும் பொன்சேகா ஏன் தருஸ்மன் அறிக்கையாளரிடம் பிழையை சுட்டிக் காட்டவில்லை?
முன்னாள் மனிதவுரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இறுதிப் போர்க்களத்தை பார்வையிட வருகிறார் என்றதும் முள்ளிவாய்க்காலில் குவிந்து கிடந்த படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின் எச்சங்கள் எவ்வாறு மாயமாக மறைந்தன என அக்காலப் பகுதியில் ஊகங்களில் உண்மைகள் வெளிவந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்