விபத்துகளினால் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

விபத்துகளினால் மாத்திரம் அரச வைத்திய சாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிக எண்ணிக்கையானவர்கள் வருகை தருவதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்றா நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, விபத்துகளினால் ஒவ்வொரு 03 மணிநேரத்துக்கும் ஒருமுறை நால்வர் உயிரிழப்பதாகத் தொற்றா நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமித்த சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.

தேசிய விபத்து நிவாரண வாரம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று நேற்று செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அந்த சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தங்கி கிசிச்சைப் பெறுவதற்கு விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் வருகிறார்கள். இவ்வாறு வருபவர்களில் அண்ணளவாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விபத்துகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆறு நபர்களில் ஒருவர் வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ளும் வகையில் விபத்துகளுக்கு உள்ளாகுகிறார்கள். ஒரு வருடத்துக்கு 10,000 முதல் 12,000 வரையிலானவர்கள் விபத்துகளினால் உயிரிழக்கிறார்கள்.

அதாவது, மூன்று மணிநேரத்து ஒரு முறை நால்வர் விபத்துகளில் உயிரிழக்கிறார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நாளொன்றுக்கு 3235 வரையானவர்கள் விபத்துகளினால் உயிரிழக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் அரச வைத்தியசாலைகளில் விபத்துகளினால் பாதிப்படைபவர்களுக்கு மாத்திரம் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதி செலவிடப்படுகிறது. எனவே இது நாடொன்றினால் தாங்கிக்கொள்ள முடியாத சுமையாகும்.

வெளிநோயாளர் பிரிவுகளில் சிகிச்சை பெறுபவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் இடம்பெறும் பல்வேறு முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்