2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை பெறுபேறுகள் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை, பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சை சுட்டெண் (Index Number)-ஐ பயன்படுத்தி www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடாக பார்வையிட முடியும்.
இந்தப் பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் 199,598 பேர் பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 637 பேர் தனியார் பரீட்சார்த்திகளுமாவர்.
அவர்களில் 147,407 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். நாடு முழுவதும் 1,669 பரீட்சை நிலையங்களிலும், 325 ஒருங்கிணைப்பு நிலையங்களின் ஒத்துழைப்புடன் பரீட்சை நடத்தப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், 2026 ஜூலை 23 முதல் உத்தியோகபூர்வ பெறுபேறு அறிக்கைகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழி சேவை மூலம் பரீட்சை சுட்டெண் அல்லது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்ய முடியும்.
பாடசாலைகள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகளுக்கும் தங்களது உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் பெறுபேறு அறிக்கைகளை இணையவழியில் பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் 1911 என்ற உதவி இலக்கத்தை அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் பிரிவை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.