காணிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நகர சபை உறுப்பினர், நேற்று வியாழக்கிழமை இரவு ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் – ருவன்புர பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை பெற்றுத் தருவதாகக் கூறி, அந்த பகுதியில் வசிக்கும் சிலரிடமிருந்து 5 இலட்சம் ரூபாய் முதல் 10 இலட்சம் ரூபாய் வரையான பணம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், பணம் பெற்றுக்கொண்ட பின்னர் குறித்த நபர்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பணம் வழங்கிய ஒருவரால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சந்தேகநபரிடம் பணம் வழங்கிய மேலும் சிலரும் முறைப்பாடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரின் வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து விபரங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.










