வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, தனது புதுப்பிக்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணியகங்களுக்காகப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொது இணையத்தளத்தையும், நேற்று திங்கட்கிழமை அமைச்சின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவ நிகழ்வில் தொடங்கி வைத்தது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர், சுற்றுலாத்துறைப் பிரதி அமைச்சர், அமைச்சின் செயலாளர், இணையவழியாக இணைந்திருந்த வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் தலைவர்கள், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பப் பங்காளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன், புதிய இடைமுகத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட இணையத்தளத்தைத் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஹேரத், டிஜிட்டல் மாற்றம் என்பது புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல, அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு உயர் பயனுறுதிப்பாடு, அணுகல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் சேவை செய்யும் முறையை மேம்படுத்துவதாகும் என்று வலியுறுத்தினார்.
மேலும், இந்தப் புதிய தளம், குடிமக்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை சமூகங்கள், வெளிநாட்டுப் பங்காளிகள், முதலீட்டாளர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோருடன் இலங்கையின் டிஜிட்டல்சார் ஈடுபாட்டை வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
பொது வலைத்தளத்திட்டத்தின் முதற்கட்டத்தின் ஒரு பகுதியாக, புக்கரெஸ்டில் உள்ள இலங்கைத் தூதரம், மாலேயில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், பிரேசிலியாவில் உள்ள இலங்கைத் தூதரம், வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஹேக்கில் உள்ள இலங்கைத் தூதரம் மற்றும் கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரம் உள்ளிட்ட ஏழு இலங்கைத் தூதரகங்கள் இந்த ஒருங்கிணைந்த தளத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பொது வலைத்தள செயற்றிட்டமானது, எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கைத் தூதரகங்களையும் ஒருங்கிணைந்ததும், தரப்படுத்தப்பட்டதுமான டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன், பல கட்டங்களாக விரிவுபடுத்தப்படவுள்ளது.
அமைச்சின் பொது இராஜதந்திரப் பிரிவு, பொது நிர்வாகப் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆகியவை, இலங்கை கணினி அவசரகால ஆயத்தக் குழு (SLCERT), இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப முகமை (ICTA) மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து, ஃபிரன்ட்வோக்கர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் இந்த முன்னெடுப்பை முன்னின்று நடத்தின.
புதிதாகத் தொடங்கப்பட்ட இணையத்தளமும், பொது வலைத்தளமும் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, அணுகல்தன்மை மற்றும் பயனர்-நட்புத்தன்மை ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடக்கமானது, அரசாங்கத்தின் டிஜிட்டல் உருமாற்றக் கொள்கைக்கு இணங்க, அமைச்சின் டிஜிட்டல் உருமாற்றப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. மேலும், நவீனமானதும், பாதுகாப்பானதும் மற்றும் குடிமக்களை மையமாகக் கொண்டதுமான டிஜிட்டல் தளங்கள் மூலம் பொதுச் சேவை வழங்குதலை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரந்த அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.