“உலக சுற்றாடல் தினத்தை” முன்னிட்டு, கந்தளாய் வலயக் கல்வி அலுவலகமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாண அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த விசேட சுற்றாடல் விழிப்புணர்வு பேரணி நேற்று கந்தளாயில் நடைபெற்றது.
தற்போது நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு அங்கமாக இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பமான இந்த விழிப்புணர்வு நடைபவணி (பேரணி), பிரதான வீதி வழியாக நகர்ந்து கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையை வந்தடைந்தது.
சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம், மரநடுகை, மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இப்பேரணியின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகள், அக்ரபோதி பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் கலந்துகொண்டு சுற்றாடல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு இப்பேரணியில் பயணித்தனர்.
நிகழ்வின் நிறைவில், சுற்றாடல் தினத்தை நினைவுகூரும் வகையில் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.