மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடல்

 

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரு பற்றிக் விசேட சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்

குறித்த சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது .

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் விவசாயச் , மீன்பிடி மற்றும் குடியிருப்புக் காணி உள்ளிட்ட பல விவகாரங்களில் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள் இங்கு முஸ்லிம்கள் சார்பில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தூதுவரிடம் எடுத்து கூறினார்.

முஸ்லிம்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப காணி பகிர்வு இடம்பெறாமல் பெரும் அநீதி இழைக்கப்படுவதாகவும் ,

ஏறாவூர் பிரதேசத்தில் ஒரு பிரதான பாடசாலை தன்னை அபிவிருத்தி செய்து வளங்களை விருத்தி செய்ய முடியாமல் சிரமங்களை எதிர்கொள்கிறது , பல பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினர் தம் வசம் உள்ள பொது மற்றும் தனியார் காணிகளை இணக்க அடிப்படையில் விடுவிக்கும் நிலையில் எதிர்கால சந்ததிகளான பாடசாலை மாணவர்களின் நலன் கருதி பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது ,

கல்குடா தேர்தல் தொகுதியில் கோறளை மத்தி செயலகப் பிரிவு முதலான பகுதிகளில் எல்லை நிர்ணயம் , காணி விவகாரம் தொடர்பாக பனம்பலம ஆணைக்குழுவினால் சிபாரிசு செய்யப்பட்ட விடயங்கள்கூட பல வருடங்கள் கடந்தும் கூட அமுல்படுத்தபடாமல் கல்குடா முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது .

கோறளைபற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 11 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளிடக்கி அது உருவாக்கப்பட்டபோதிலும் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரமே அந்த செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. கோறளை மத்தி செயலகப் பிரிவிற்கு சுமார் 240 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு வழங்கப்படவேண்டியுள்ளது என்பதை அலி ஸாஹிர் மௌலானா எடுத்துக் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளை சலவை செய்து சில இழிவான முஸ்லிம் பெயர்தாங்கி பிறவிகள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் முழு முஸ்லிம் சமூகமும் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டு வருவதுடன் இது தொடர்பில் நீதியான விசாரணை மற்றும் குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருவது தொடர்பான சமூக நிலைப்பாட்டை இங்கு விளக்கினார்.

அத்துடன் இந்த இழி செயலில் ஈடுபட்டவர்களை அடிப்படை காரணங்கள் இன்றி தொடர்புபடுத்தி காத்தான்குடி பிரதேசத்தில் சமூக மற்றும் மார்க்க விடயங்களில் ஈடுபட்டு வந்த ஒரு பள்ளிவாசல் மூடப்பட்டு இருப்பது தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா இங்கு பிரத்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களிடம் விரிவாக எடுத்து கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் , அநீதிகள் தொடர்பில் விரிவாக தெளிவு படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா ஏறாவூர் நகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாட்டில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தெளிவுபடுத்தி இதற்கான மனிதாபிமான உதவிகளை பிரித்தானிய அரசு கவனத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரி நகர சபை செயலாளர் மூலமாக மகஜர் ஒன்றினையும் கையளிப்பு செய்தார்.

இவ்விடயங்களை மிக அவதானமாக கேட்டறிந்து கொண்ட உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக் தன்னிடம் முன் வைக்கப்பட்ட விடயங்களை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் அழுத்தங்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் எம்எச்எம். ஹமீம் மற்றும் உலமா சபை ஏறாவூர் கிளை, வர்த்தக சங்கம் உட்பட பொது நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்