மட்டக்களப்பு-வாழைச்சேனையில், வீடு ஒன்றை உடைத்து திருடப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் போன்ற திருட்டுப் பொருட்களை, தனது வீட்டில் வைத்திருந்த ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை, நேற்று புதன்கிழமை மாலை கல்குடா பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 21ம் திகதி வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகை திருட்டுப் போயுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நாவலடி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்த பொலிஸார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, திருடப்பட்ட நகை மற்றும் பணம் என்பவை தன்னுடைய வீட்டில் இருப்பதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கான்ஸ்டபிள் நகைகளை திருடிய சந்தேகநபரிடம், “நான் தான் இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறேன் ஆகவே திருடிய பணம் மற்றும் நகைகளை என்னிடம் கொடு” என தெரிவித்து அவற்றை வாங்கியுள்ளார்.
அதன்பின், குறித்த கான்ஸ்டபிள் நகை மற்றும் பணத்தை தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து அதை பத்திரமாக வைத்திருக்குமாறு கூறியுள்ளார்
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அவர், அதன்பின் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விசேட நடவடிக்கைக்காக பாசிக்குடா சுற்றுலா மையத்தில் கடமையாற்றி வந்த குறித்த கான்ஸ்டபிள், நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதுடன், அவர் தனது நண்பரிடம் கொடுத்து வைத்திருந்த நகை மற்றும் பணம் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.