Sri Lanka Tamil News Site

கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பில் காதலன் கைது

- Advertisement -

கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு மாணவியின் பாடுகொலை தொடர்பில் யுவதியின் காதலனை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் ஹோமாகம, கிரிவத்துடுவ பகுதியைச் சேர்ந்த சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி (வயது-23) என்பவரே இன்று நண்பகல் 12 மணியளவில் கொழும்பு குதிரை பந்தய திடலில் வைத்து கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

கூரிய ஆயுதத்தால் கழுத்தின் இருபுறங்களிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், மைதானத்தின் படிக்கட்டுப்பகுதியில் சடலம் மீட்கப்பட்டதகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் விரிவுரைகளை முடித்துக் கொண்டு இன்று காலை 11 மணியளவில் தனது காதலனுடன் பேசுவதற்காக குதிரை பந்தய திடலுக்கு சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்த யுவதி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது காதலனிடம் உறவை முறித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ள நிலையில் இதன் காரணமாகவே இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர்.

- Advertisement -

சம்பவம் இடம்பெற்ற குறித்த நேரப்பகுதியில் இளைஞன் (காதலன்) குதிரை பந்தய திடல் அருகே ஓடிச் செல்வது அருகில் உள்ள சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் சந்தேக நபரான கொழும்பு பல்கலைக்கழக மூன்றாம் ஆண்டு கலைப் பிரிவைச் சேர்ந்த இளைஞனை கொலனாவையில் உள்ள அவரது வீட்டிற்கு அருகாமையில் வைத்து பொலிசார் இன்று பிற்பகல் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞனின் வீட்டிற்கு சென்ற பொலிசார் கொலை இடம்பெற்ற போது இளைஞன் அணிந்திருந்த உடை , கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கும் இரத்தம் தோய்ந்த கத்தி , பணப்பை மற்றும் இளைஞனின் கையடக்க தொலைபேசி என்பவற்றை மீட்டுள்ளனர்.

குறித்த இளைஞன் குறித்த பொருட்களை வீட்டில் வைத்து விட்டு தற்கொலை செய்யும் நோக்கில் வீட்டை விட்டு வெளியேறிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கொலைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

- Advertisement -