பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து 25 வயது யுவதி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்ட பின்னணியில் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இவர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் காதலனின் தந்தை, சித்தப்பா, சகோதரி மற்றும் பாழடைந்த கிணற்றில் சடலத்தை போட்டு அதற்குமேலால் குப்பைகளை இட்டு மூடியதாக சந்தேகிக்கப்படும் பெக்கோ இயந்திரச் சாரதி, பெக்கோ வாகன தரகர், கொலை செய்யப்பட்டதை வெளிப்படுத்திய சந்தேக நபர் என ஆறு சந்தேக நபர்களுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூதூர் பொலிஸ் பிரிவின் கிளிவெட்டி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து வெள்ளிக்கிழமை யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டது.குறித்த யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் போடப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

பாழடைந்த கிணற்றில் சடலமொன்று கிடப்பதாக மூதூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அகழ்வு செய்வதற்காக மூதூர் நீதிமன்ற அனுமதியை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் குறித்த கிணறானது பெக்கோ இயந்திரம் மூலம் அகழ்வு செய்யப்படபோதே சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சேருநுவர-தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி  (வயது – 25) என தெரியவருகின்றது.மீட்கப்பட்ட சடலமானது சேதமடைந்த நிலையில் காணப்பட்டது.அத்தோடு யுவதியின் கைப் பையும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யுவதி, காதலனினால் கொலை செய்யப்பட்டு கிணற்றினுள் வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படும் நிலையில் 25 வயதான காதலன் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று சனிக்கிழமை மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்