மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட கடை மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச்செயலமர்வு மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் (DMC) மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன இணைந்து கூட்டு ஏற்பாடாக இந்நாட்டிற்கு அவசியமான இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்திருந்தன.
வர்த்தக நிலையங்களில் திடீரென ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்கும் முறைகள், அவசரகாலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி சேவைகள் தொடர்பாக இதன்போது விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது
தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் நடைமுறைப் பயிற்சியும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்செயன் அவர்கள், வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
மேலும், அவசரகாலத் தயார்நிலையை மேம்படுத்துவதன் மூலமே உயிர் மற்றும் சொத்து இழப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
சிறப்பு விழிப்புணர்வு கருத்துரையை வழங்கிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் கு.நெடுஞ்செழியபல்லவன், தீ விபத்துகளால் ஏற்படக்கூடிய கடுமையான உடல் ரீதியான பாதிப்புகள், அவற்றுக்கான முதலுதவிகள் மற்றும் விபத்துகளைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து மருத்துவ ரீதியிலான ஆலோசனைகளை வழங்கினார்.
செயலமர்வின் ஒரு அங்கமாக, கலந்துகொண்ட வர்த்தகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, அனைவரினதும் கூட்டு ஒத்துழைப்புடன் பாதுகாப்பானதொரு மட்டக்களப்பு மாநகர எல்லைப் பகுதியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் வைரமுத்து தினேஷ்குமார், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், மாநகர சபை உறுப்பினர்கள், தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்